நிலவு ஏன் வளர்கிறது, பிறகு தேய்கிறது

சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று படித்திருக்கிறோம். ஆனால் உண்மையில் சூரியன் உதிப்பதில்லை. மறைவதுமில்லை. அது இருந்த இடத்தில்தான் இருக்கிறது. பூமிதான் மேற்கில் இருந்து கிழக்காகச் சுற்றி வருகிறது. அதனால்தான் சூரியன் உதிப்பதுபோலவும் மறைவதுபோலவும் தெரிகிறது.

சரி, நிலவு ஏன் வளர்கிறது, பிறகு தேய்கிறது?
பெüர்ணமி நாளன்று நிலவு வெள்ளித் தட்டுபோலப் பிரகாசிக்கிறது. ஆனால் மறுநாளில் இருந்து தினமும் சிறிது சிறிதாகத் தேய்ந்து, அமாவாசையன்று காணாமலே போகிறது. பின்னர் மீண்டும் பிறந்ததுபோல, சிறிது சிறிதாக வளர்ந்து வெள்ளித் தட்டுபோல வானில் மின்னுகிறது. இதை வளர்பிறை, தேய்பிறை என்கிறார்கள்.

உண்மையில் நிலவு தேய்வதும் இல்லை, வளர்வதும் இல்லை. பூமி, சூரியனைச் சுற்றுகிறது. பூமியின் துணைக் கோளான நிலவு, பூமியை வலம் வருகிறது. நிலவு இருபத்தி ஒன்பதரை நாட்களில் பூமியை ஒரு சுற்று வலம் வந்துவிடுகிறது. சூரியனில் இருந்துதான் நிலவுக்கு ஒளி கிடைக்கிறது. அது சூரிய ஒளியை எந்த அளவு பிரதிபலிக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் நிலவு வளர்வதுபோன்றோ தேய்வதுபோன்றோ நமக்குத் தெரிகிறது. பூமியிலிருந்து பார்க்கும்போது, நிலவின் ஒரு பகுதி மட்டுமே நமது கண்களுக்குத் தெரிகிறது. அதன் மறுபுறம் நமக்குத் தெரிவதில்லை.

நிலவு பூமியைச் சுற்றி வருகையில் ஒரு நிலையில் அது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வருகிறது. அப்போது நிலவின் நமக்குத் தெரியாத பின்பகுதியில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது; முன்பக்கம் சூரிய ஒளி படுவதில்லை. எனவே, நிலவு நம் தலைக்கு மேலே இருந்தாலும், அது நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. அதைத்தான் அமாவாசை கும்மிருட்டு என்கிறோம்.

பிறகு சந்திரன் தொடர்ந்து பூமியை வலம் வர ஆரம்பிக்கும். அப்போது அதன் முன்புறத்தில் எவ்வளவு தொலைவுக்கு சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிக்கிறதோ, அந்தப் பகுதி மட்டும் நமக்குத் தெரிகிறது. அமாவாசை முடிந்து ஒரு வாரத்தில் சந்திரனின் பாதி மேற்பரப்பில் ஒளி படர்ந்திருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரதிபலிப்பு அதிகரிக்கும்.

பெüர்ணமி நாளன்று பூமிக்கு எதிரேயுள்ள நிலவின் முழுப் பரப்பும் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது. நிலவு தகதகவென்று மின்னுகிறது. அந்த நாளில் சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி இருப்பதுதான், நிலவு சூரிய ஒளியை முழுமையாகப் பிரதிபலிப்பதற்குக் காரணம். பிறகு மீண்டும் பழைய சுழற்சிக்கு நிலவு செல்ல, பதினைந்தாவது நாளில் முற்றிலும் மறைந்து அமாவாசை வருகிறது. அடுத்த பதினைந்தாவது நாளில் பெüர்ணமி வருகிறது.

இந்த சுழற்சிதான் நிலவு வளர்வதாகவும் தேய்வதாகவும் தோன்றுவதற்குக் காரணம். பெüர்ணமியன்று சூரியன் மறையும்போது தோன்றும் முழுநிலா, மறுநாள் காலை சூரியன் உதயம் ஆகும்போதுதான் மறையும். அதுவரை நம் கண்களுக்கு விருந்தளித்து மகிழ்விக்கும்

No comments:

Post a Comment